நாம் தினமும் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து ஏதோவொரு புது விஷயம் நம்மை வந்தடைந்தவண்ணம் இருக்கிறது. அதை கண்டுகொள்வதும், ஏற்றுக்கொள்வதிலுமே நம் வாழ்க்கையின் போக்கு அடங்கியுள்ளது. ஏதோவொன்றை பேசத்தொடங்கி எங்கேயோபோய் நின்ற கதையாய் தான் இன்றைய கீச்சுகள் அமைந்தன. இப்படித்தான் ஆரம்பித்தது விவாதம்- மதம் மாற்றத்தை கண்டு கோபப்படுதலே ஒரு வகையில் தீவிரவாதம் என்றார் நண்பர் ஒருவர். ஒருவருக்கு உண்மையாகவே நம்பிக்கை ஏற்பட்டோ அல்லது மதக்கோட்பாடால் ஈர்க்கப்பட்டோ மட்டுமே மதம் மாறுதல் வேண்டுமே அன்றி வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளுக்கு ஆசைப்பட்டு வரக்கூடாது என்றேன். காரணம், மதம் மாற்றுவோருக்கு ஏழைமக்கள்மீது அக்கறை இல்லை. அவர்களது ஏழ்மையை உபயோகித்து தங்கள் மதத்தை பரப்புகிறார்கள்(இதனால் அவர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகள் ஆவார்களாம்!). எனது வருத்தமெல்லாம் ஒருவரது இயலாமையின்(ஏழ்மை) காரணத்தினால் அவர்களை ஆட்டுவிப்பது அந்தமக்களை இழிவுபடுத்துதல் ஆகாதா என்பதே.
இதுநாள்வரை இந்தக் கண்ணோட்டத்துடன் தான் இருந்தேன். வெயிலூரான் அந்த கேள்வியை கேட்கும்வரை. நான் மதமாற்றத்தை எதிர்ப்பதற்கு காரணம் சாதீயம் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக் கூடாது என்பதே என் நோக்கம் என்றும் கூறினார். கீச்சில் 140 எழுத்தில் ஒருவர் மனதைப் படிப்பது கடினமே. ஆகையால் அவர் கூற்றிற்கு நான் அவ்வாறான எண்ணம் கொண்டவளல்ல என விளக்க முடியவில்லை.
ஆனால், எதிர்பாராதவிதமாக என்னுள் நிகழ்ந்த கதை வேறு. மதமாற்ற வருவோர் சுயநலமாய் இயங்கும்போது நாமும் ஏன் அவ்வழியையே பின்பற்றக்கூடாது? பொருளாதார முன்னேற்றம் தேவை, அதற்கு மதமாற்றத்தை உபயோகிக்கலாமே? வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது தவறில்லையே. இத்தனை நாள் இந்தப் பரிமாணத்தை யோசிக்கத் தவறிவிட்டேன். மதமாற்றுபவரின் சுயநலத்திலும் மறைபொருளாய் ஒரு பொதுநலம் அடங்கி உள்ளது. நாம் மதத்திற்காக மதம் மாறவில்லை என பேசுபவர் பேசட்டுமே.
சுயமரியாதை நாம் வரையும் கோடு. அதனால் நம்மை மீறி அதை நாம் இழக்க போவதில்லை. மதமாற்றத்தினால் ஒரு சமுதாயம் முன்னேறுமெனில் அது நல்ல விஷயமே.
என் கண்களை திறந்த வெயிலூரான் அவர்களுக்கு நன்றிகள் பல.